Saturday, August 19, 2017

ரவை இனிப்பு பணியாரம் l Rava Paniyaram in tamil l Sweet Raava Paniyaram l Selva's Kitchen



பாட்டியின் கைமணத்தில் முதலில் ஞாபகம் வருபவை பணியாரம்.பணியாரத்தில் பல வகை இருப்பினும் ரவை பணியாரம் சிறப்பான இடத்தை பிடிக்கும்.இதனுடன் பழம்,இனிப்பு சுவைக்காக வெல்லம் சேர்ப்பதால் மிருதுவாகவும் வாசனையாகவும் சுவையாகவுமிருக்கும்.சத்தான இந்த பணியார வகையை சுலபமாகவும் குறைந்த நேரத்திலும் சுட்டெடுக்கலாம்.


இந்த அளவான ஓலைப்பெட்டி,பின்னிருக்கும் வண்ணம்  நிறைந்த செப்புமர சாமான்கள், இவ்வயதில் அம்மா எனக்காக பேரன்களுக்கு மத்தியில் கொடுத்த ஆச்சர்ய பரிசாகும்.

ரவை பணியாரம் :
 ரவையை ஊறவைத்து - மாவு ,வெல்லம்  சேர்த்து - பணியாரம் சுடவும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 35நிமிடம்
பணியாரம் எண்ணிக்கை : 14

தேவையான பொருட்கள் :

ரவை                 1கப்
மைதா              2மேஜைக்கரண்டி
அரிசி மாவு     1மேஜைக்கரண்டி

நெய் (அ ) நல்லெண்ணெய்    3மேஜைக்கரண்டி
பொடித்த வெல்லம்                   1/2கப்
ஏலக்காய்                                       3
பழுத்த வாழைப்பழம்               1
தேங்காய் துருவல்                     4மேஜைக்கரண்டி
ஆப்பசோடா / Eno Fruit உப்பு     2சிட்டிகை / 1/4தேக்கரண்டி
உப்பு                                                   1/4தேக்கரண்டி

செய்முறை :

# முதலில் ரவையை 3/4கப் தண்ணீர் சேர்த்து  15நிமிடம்  ஊறவைக்கவும்.


1.பொடித்த வெல்லம்,ஏலக்காய் இவையிரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து குறைவான தீயில் சூடேற்றவும்.வெல்லம் கரையும்வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.அரிப்பான்(strainer) உதவியுடன் படிந்ததிருக்கும் மாசை அகற்றவும்.


2.ஊறிய ரவையில் அரிசி மாவு,மைதா,தேங்காய் துருவல்,வெல்லக்கலவை சேர்த்து கிளறவும்.


3.மசித்த வாழைப்பழம்,ஆப்பசோடா,உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.மாவுக்கலவை ரொம்ப கெட்டியாகவும் நீர்த்தும் இருக்கக்கூடாது.
[ஆப்பசோடா சேர்த்தப்பின் மாவை ரொமப நேரம் உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கக்கூடாது]


4.பணியாரக்கல்லை குறைவான தீயில் வைத்து சூடேற்றி, சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் தடவி குழியின் 3/4பகுதி வரும்வரை நிரப்பி மூடியிட்டு 1.30நிமிடம் வேகவிடவும்.


5.மூடியை எடுத்து பணியாரக்குச்சி உதவியுடன் பணியாரங்களை திருப்பி போட்டு 30நொடி முதல் ஒரு நிமிடம்வரை வேகவிட்டு எடுக்கவும்.
பணியாரம் வெந்ததை கல்லிலிருக்கும்போதே அதன் நடுப்பகுதியில் கத்தி அல்லது குச்சி உதவியுடன் குத்திப்பார்த்து சுத்தமாக ஒட்டாமல் வந்தால் முழுவதும் வெந்ததை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.


ரவை இனிப்பு பணியாரம் !!!



குறிப்புகள் :
1.வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டி ,சர்க்கரை சேர்க்கலாம்.

இந்த பதிவை ஆங்கிலத்தில் காண Sweet Rava Paniyaram. உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது.

Friday, August 18, 2017

பச்சைப்பயறு தோசை l Pesarattu Dosai



பச்சைப்பயறு புரதச்சத்து,இரும்புச்சத்து நிறைந்த பயறாகும்.இது உடல் எடை குறைக்கவும்,இரத்த அழுத்தத்தை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.பச்சைப்பயறு தோசை ஆந்திராவில் மிகவும் பிரபலமான காலை உணவாகும்.இதை பெசரட்டு தோசை / Pesarattu Dosai என்று அழைப்பர்.இதனுள் உப்புமாவை சேர்த்து பரிமாற்றப்படும் தோசை MLA Pesarattu என அழைக்கப்படுகிறது.குழந்தைகளுக்கு சிறு வயது முதல் பயறு வகைகளை அறிமுகப்படுத்தி அதன் பயன்களை கூற வேண்டும்.இதில் வெங்காயம் சேர்த்து வார்ப்பதால் சுவை மிகும்.பச்சைப்பயறு தோசையை இஞ்சி சட்னி ,புளி  சட்னி மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.


பச்சைப்பயறு தோசை  :
பயறை ஊறவைத்து - மசாலா சேர்த்து - தோசை வார்க்கவும் 
ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 8மணி நேரம் (அ ) இரவு முழுவதும் 
சமைக்க தேவைப்படும் நேரம் : 30நிமிடம் 
தோசையளவு : 5எண்ணிக்கை 

தேவையான பொருட்கள் :
பச்சைப்பயறு   1கப் 
பச்சரிசி               3மேஜைக்கரண்டி 

பச்சை மிளகாய்     2
இஞ்சி                         1/2'இன்ச் 
சீரகம்                          3/4தேக்கரண்டி 
கொத்தமல்லி தழை    1கையளவு (தேவைப்பட்டால் )
பெருங்காயம்          2சிட்டிகை 
தண்ணீர்                    1/2-3/4கப் 
உப்பு                            1தேக்கரண்டி 

பெரிய வெங்காயம்     1
நல்லெண்ணெய்           2மேஜைக்கரண்டி 
இட்லி பொடி                   2மேஜைக்கரண்டி 

செய்முறை :

# பச்சைப்பயறு  மற்றும் பச்சரிசியை  8மணி நேரம் (அ) இரவு முழுவதும் ஊறவைக்கவும்.


1.பயறை நன்கு கழுவிய பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து,பச்சை மிளகாய்,இஞ்சி,சீரகம் மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும். 


2.சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து, உப்பு,பெருங்காயம் சேர்த்து கலக்க வேண்டும்.


3.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்க வேண்டும்.மாவுக்கலவை மிகவும் கெட்டியாகவோ நீர்த்தோ  இல்லாமலிருக்க வேண்டும்.தோசைக்கல்லை மிதமான சூட்டில் சூடேற்றவும்.


4.ஒரு குழிக்கரண்டி மாவை வட்ட வடிவில் வார்க்கவும்.நல்லெண்ணெயை சிறிது ஓரத்தில் விட்டு ஒரு நிமிடம் வேகவிடவும்.


5.தோசையை திருப்பியிட்டு 30நொடிக்குப்பின் சூடாக பரிமாறவும்.


பச்சைப்பயறு தோசை ரெடி  !!!


வெங்காய பச்சைப்பயறு தோசை :

1.தோசை வார்த்து,சுற்றிலும் நல்லெண்ணெய்யிட்டு அரிந்த வெங்காயத்தை அதன்மேல் பரப்பி விடவும்.


2.1/2தேக்கரண்டி இட்லி போடி தூவி,ஒரு நிமிடம் வேகவிட்டு திருப்பியிடவும்.அரை நிமிடம் கழித்து சூடாக பரிமாறவும்.


வெங்காய பச்சைப்பயறு தோசை ரெடி !!!



இந்த பதிவை ஆங்கிலத்தில் காண Pesarattu Dosai / Green Gram Dal Dosai. உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது.

Tuesday, May 23, 2017

அச்சு முறுக்கு l அச்சப்பம் l ரோஸ் குக்கீஸ்



'அச்சு முறுக்கு' என்றதும் அணைவரின் நினைப்பும் சிறு குழந்தையாக இருந்த காலகட்டத்திற்கே செல்லும்.முறுக்கின் சுவை,வடிவம் இவையிரண்டையும் தொட்டு ருசிப்பதற்கு முன்னால் நம் கை அதை உடைத்து கையில் மோதிரமாக அணிவிக்கும்.இப்போதும் கோவில் வாசலில் அச்சை பார்த்தால் இதையெல்லாம் நாம் செய்வோமா? என்று நினைத்ததுண்டு.கனவு நனவானதுபோல் செய்தும் பார்த்தேன்,ருசியும் அமோகம்.
'அள்ள அள்ளக் குறையாதது' போன்று தின்னத்  தின்ன திகட்டாத இந்த அச்சு முறுக்கின் பள்ளி கால நினைவுகள் என் மனதில் அச்சாக பதிந்துள்ளது.

அச்சு முறுக்கு / அச்சப்பம்  :
மாவுக்கலவை தயாரித்து - அச்சை நனைத்து - பொரித்தெடுக்கவும் 
சமைக்க தேவைப்படும் நேரம் : 30நிமிடம் 

வீடியோ :   அச்சு முறுக்கு 


தேவையான பொருட்கள் :


அரிசி மாவு          1கப் 
மைதா                   1//4கப் 
பொடித்த சர்க்கரை   1/2கப் 
எள் / ஜீரகம்         1தேக்கரண்டி 
தேங்காய் பால்   1- 1 1/2கப் 

* பொரிப்பதற்கு எண்ணெய் 
* அச்சு முறுக்கு அச்சு 

செய்முறை :

1.ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,மைதா,பொடித்த சர்க்கரை ,எள் ஆகியவற்றை சேர்த்து கரண்டியால் கிளறவும்.பிரித்தெடுக்கப்பட்ட தேங்காய்ப்பாலை பாதியளவு சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.இப்பொழுது மீதமுள்ள தேங்காய்ப்பாலை சேர்த்து தோசை மாவு பதத்தைவிட சிறிது நீர்த்து கலவை இருக்குமாறு தயாரிக்கவும்.


2.கடாயில் எண்ணெய் ஊற்றி அச்சை அதில் மூழ்குமாறு வைத்து சூடேற்றவும்.மாவு கலவை பாத்திரம் மாற்று முறுக்கு வைக்க தட்டினையும் கடாயின் அருகில் இருக்குமாறு வைக்கவும்.


3.எண்ணெய் சூடானதும் அச்சை எடுத்து மாவுக்கலவையில் 3/4பகுதி மூழ்குமாறு வைக்கவும்,மூழ்கும்போது ஷ்.... சத்தத்துடன் மாவு அச்சில் ஒட்டிக்கொள்ளும்.பின்பு சூடான எண்ணெயில் அச்சை முழுவதும் மூழ்குமாறு வைக்கவும்.


4.எண்ணெயின் நுரை மற்றும் சத்தம் அடங்கியதும் மெதுவாக அச்சை எண்ணெயிலிருந்து எடுத்து கொஞ்சமாக ஆட்ட வேண்டும்.Non -Stick அச்சாக இருந்தால் முறுக்கு தானாகவே ஒட்டாமல் எண்ணெயினுள் விழுந்து விடும்.இரும்பு அச்சாக இருந்தால் கத்தி அல்லது குச்சி உதவியுடன் சிறிது கீழ்நோக்கி குத்தினால் முறுக்கு விழுந்து விடும்.


5.கடாய் பெரிதாக இருந்தால் இன்னொரு அச்சு முறுக்கு வேக வைக்கலாம்,இல்லையேல் அச்சை எண்ணெயில் முழ்குமாறே வைக்கவும்.பொன்னிறமாக அச்சு முறுக்கு வெந்ததும் வெளியே குச்சி அல்லது கண் கரண்டி உதவியுடன் எடுக்கவும்.



6.அச்சு முறுக்கு சூடாக இருக்கும்போது மிருதுவாகவும் ஆறினபின்
  மொறுமொறுப்பாகவும் இருக்கும்.கற்று புகாத டப்பாவினுள் வைக்கவும்.


சுவையான அச்சு முறுக்கு தயார் !!!


குறிப்புகள் :
1.அச்சு முறுக்கு மாவு தயாரித்தப்பின் அதை பரந்த தட்டில் அச்சின் பாதியளவு இருக்குமாறு எடுத்தால் முறுக்கு சுடும்போது சுலபமாக இருக்கும்.அச்சை முழுவதுமாக மாவில் மூழ்கடித்தால் எண்ணெயினுள் வைத்ததும் பொரிந்து முறுக்கு அச்சை விட்டு பிரியாது.மாவில் ஒருவேளை தவறி முழுவதுமாக அச்சு மூழ்கிவிட்டால் அதை கழுவி ,துடைத்து பின்னர் சூடேற்றி பொரித்தெடுக்கவும்.


2.மாவு கலவையை கடாயின் அருகே வைத்தால் முறுக்கு சுட சுலபமாக இருக்கும். 


3.ஒவ்வொரு முறை முறுக்கு அச்சை விட்டு பிரிந்து எண்ணெயினுள் விழுந்ததும் அச்சை எண்ணெயினுள்ளேயே வைக்க வேண்டும்.


4.இரும்பு அச்சாக இருந்தால் ஒரு நாளுக்கு முன்னரே எண்ணெயில் மூழ்கி வைக்க வேண்டும்.
5.தேங்காய் பாலுக்கு பதில் 3மேஜைக்கரண்டி தேங்காய் பவுடரை நீருடன் கலந்து அச்சு முறுக்கு தயாரிக்கலாம்.

மொறுமொறு அச்சு முறுக்கு தயார் !!!



உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.



அச்சு முறுக்கு பதிவை ஆங்கிலத்தில் காண  Achu Muruku  




Saturday, April 29, 2017

வறுத்தரைத்த கோழிக்கறி / CHICKEN Varutharacha Curry



வறுத்தரைத்த கோழிக்கறி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு மசாலா வகையாகும்.இதனை இட்லி,தோசை ,சப்பாத்தி மற்றும் சாதத்துடனும் சேர்த்து பரிமாறலாம்.சிக்கன் ப்ரோட்டீன் நிறைந்த உணவென்பதால் குழந்தைகளுக்கு நல்லது."அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதை மனதில் வைத்து ருசிக்கவும்.அமிர்தத்தையும் பரிசோதித்து சாப்பிடும் காலத்தில் நாம் இருக்கிறோம்.வீட்டிலேயே மசாலா தயாரித்து சமைப்பதால் நல்ல மணத்துடனும் ,சுவை மிகுந்தும் இருக்கும்.நாவில் எச்சில் ஊற பதிவை எழுதுகிறேன்.
உடல் உஷ்ணம் அதிகரிப்பதால் கோடை காலங்களில் பெரும்பாலும் சிக்கன் உண்பதை  தவிர்க்கவும் அல்லது சாப்பிட்டபின் எலுமிச்சை பானம்  / மோர் அருந்தலாம். 


வறுத்தரைத்த கோழிக்கறி  :
மசாலா  தயாரித்து - கறியை சேர்த்து வேகவைக்கவும் 
கோழிக்கறி சுத்தம் செய்ய : 10நிமிடம் 
சமைக்க தேவைப்படும் நேரம் : 40நிமிடம் 
பரிமாறும் அளவு  : 3பேர் 

தேவையான பொருட்கள் :

எண்ணெய்                          2மேஜைக்கரண்டி 
கடுகு                                     1தேக்கரண்டி  
கறிவேப்பிலை                 1தழை 
 பச்சை மிளகாய்              1/2
பெரிய வெங்காயம்        1
பெரிய தக்காளி                1
மஞ்சள் தூள்                      1/4தேக்கரண்டி 
இஞ்சி -பூண்டு விழுது   1மேஜைக்கரண்டி 
புதினா இலை                    1கையளவு 
கோழிக்கறி / சிக்கன்      1கிலோ
தண்ணீர்                               4கப் +
கொத்தமல்லி தழை      1கையளவு 
உப்பு                                      தேவையான அளவு 

மசாலா தயாரிக்க :
எண்ணெய்                         1தேக்கரண்டி 
கிராம்பு                                  3
பட்டை                                  1"
ஏலக்காய்                             1
கொத்தமல்லி விதை     2மேஜைக்கரண்டி 
சோம்பு                                  1மேஜைக்கரண்டி 
ஜீரகம்                                    1தேக்கரண்டி 
மிளகு                                     1தேக்கரண்டி 
முந்திரிபருப்பு                    4
கறிவேப்பிலை                   6இலை 
வற்றல் /  காய்ந்த மிளகாய்   6சிறியது / 4 பெரியது 
பூண்டு                                     4பல் 
சின்ன  வெங்காயம்          6
தேங்காய்                               1/2கப் 

செய்முறை :
 # முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள் அல்லது உப்பு சேர்த்து 5முறை அலசி சுத்தம் செய்யவும்.


தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில்  வைத்துக்கொள்ளவும்.

1.ஒரு அடிகனமான கடாயில் 1தேக்கரண்டி எண்ணெய் விட்டு மசாலா தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களையும் சேர்த்து மிதமான சூட்டில் 3-4நிமிடம் வரை வதக்கவும்.பின்னர் சிறிது ஆறவைத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.


2.அடிகனமான பெரிய கடாயில் எண்ணெய் சேர்த்து ,சூடானதும் கடுகு சேர்க்கவும்.கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,நறுக்கிய வெங்காயம்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து 2-3நிமிடம் வதக்கவும்.நறுக்கிய தக்காளி ,இஞ்சி-பூண்டு விழுது,புதினா இலை சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.


3.சிக்கனை சேர்த்து 3நிமிடம் வதக்கவும்,இப்பொழுது சிக்கன் நீர்விட்டு காணப்படும்.அரைத்த மசாலா,4கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 10-15 நிமிடம் வரை மூடிவிட்டு வேக விடவும்.2நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விடவும்.சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.


 சுவையான  வறுத்தரைத்த கோழிக்கறி ரெடி !!!

 

இட்லி.தோசை,சப்பாத்தி,சாதம் ஆகியவற்றுடன் .பரிமாறலாம்,

குறிப்புக்கள் :

1.கெடாமலிருக்க எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சூடேற்றவும்.
2.பரிமாறும்போது மட்டும்  வேறு பாத்திரத்திற்கு தேவைக்கேற்ப எடுக்கவும், சமைத்த பாத்திரத்தில் வைத்தே காலியாகும்வரை சூடேற்றி சாப்பிடவும்[சமைத்த நாளைவிட அடுத்த நாள் சுவை மிகுந்து காணப்படும்].



உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.



வறுத்தரைத்த கோழிக்கறி பதிவை ஆங்கிலத்தில் காண  CHICKEN Varutharacha Curry



Sunday, April 9, 2017

நீர் மோர் / மசாலா மோர் / ராம நவமி நீர் மோர் / Neer Mor / Spiced Buttermilk


நீர் மோர்,கோடை காலங்களில் உடம்பை குளிர்விக்க அருந்தப்படும் ஒரு நல்ல பானமாகும்.மோரில் பச்சை மிளகாய்,இஞ்சி ,கறிவேப்பிலை ,ஜீரகம் சேர்த்து அடிப்பதால் அதன் சாறு இறங்கி நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும்.இதனை மசாலா மோர் என்றும் அழைப்பர்.இதனுடன் தாளிப்பு சேர்த்து 'ராம நவமி' அன்று கடவுளுக்கு பிரசாதமாக பானகத்துடன் படைப்பர்.நீர் மோர்,கேழ்வரகு கூழ்,கம்பு கூழ் என கிராமத்து வாசம் நகர்ப்புறங்களிலும் வீச தொடங்கியுள்ளது.மக்கள் பழமையை விரும்புவது பண்பாட்டை தக்கவைத்துக்கொள்ள நினைக்கும் நல்லெண்ணமேயாகும்.


கோடை காலங்களில் தண்ணீர் மற்றும் மோர் ஆகியவற்றை மண்பானைகளில் வைத்து குடிப்பதால் இயற்கையான முறையில் உடல் குளிர்விக்கப்படுகிறது.

நீர் மோர் : 
மோரில் - காரம்,தாளிப்பு சேர்த்து - அடிக்கவும் 
மொத்த நேரம் : 5நிமிடம் 
பரிமாறும் அளவு : 3பேர் 

வீடியோ : நீர் மோர் 



தேவையான பொருட்கள் :
தயிர்                           1கப் 
தண்ணீர்                    3கப் 
பச்சை மிளகாய்     1
இஞ்சி                         1தேக்கரண்டி 
கறிவேப்பிலை       5இலை 
ஜீரகம்                         1தேக்கரண்டி 
உப்பு                            1தேக்கரண்டி+

எண்ணெய்               1தேக்கரண்டி 
கடுகு                          1தேக்கரண்டி 
பெருங்காயம்         3சிட்டிகை 
கறிவேப்பிலை      5இலை 

செய்முறை :

1.தயிர் மற்றும் தண்ணீரை நன்றாக கரண்டியின் உதவியுடன் கட்டி இல்லாமல் அடிக்கவும்.


2.நறுக்கிய பச்சை மிளகாய் ,இஞ்சி ,கறிவேப்பிலை,ஜீரகம் ஆகியவற்றை சிறிய உரல் அல்லது மிக்ஸியில் எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.


3.எண்ணெய் ,கடுகு,பெருங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பின்பு அரைத்த விழுது ,தாளிப்பு ஆகியவற்றை மோருடன் சேர்த்து கலக்கவும்.


மண்பானையில் 2மணி நேரம் வைத்து பின் பரிமாறலாம் அல்லது ஐஸ் கட்டி சேர்த்து கொள்ளலாம்.



உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.





நீர் மோர் பதிவை ஆங்கிலத்தில் காண  Neer Mor / Spiced Buttermilk

Sunday, April 2, 2017

வெல்ல பிடிகொழுக்கட்டை / Sweet Pidi Kozhukattai


 கொள்ளு / கானம் - Horsegram ]


வெல்ல பிடிகொழுக்கட்டை பொதுவாக விநாயருக்கு 'விநாயகர் சதுர்த்தியன்று' படைக்கப்ப்டும்  இனிப்பு வகையாகும்.கொள்ளு,பொட்டுக்கடலை சேர்ப்பதால் இந்த கொழுக்கட்டையின் சுவை மிகுந்தும் ,சத்து நிறைந்தும் காணப்படும்.கொழுக்கட்டையை அவித்து எடுப்பதால் சிரியவர்கள் முதல் பெரியவர்கள்வரை வயிறு உபாதைகள் குறித்து பயமின்றி சாப்பிடலாம்.
அம்மாவின் கைவண்ணத்தில் சத்தான வெல்ல பிடிகொழுக்கட்டை இதோ !!!

வெல்ல பிடிகொழுக்கட்டை :
அரிசி மாவுடன் வெல்லப்பாகு சேர்த்து - கொழுக்கட்டை பிடித்து - ஆவியில் வேகவைக்கவும்  
சமைக்க தேவைப்படும் நேரம் : 30நிமிடம் 
பிடிகொழுக்கட்டை எண்ணிக்கை : 15

தேவையான பொருட்கள் :
வெல்லப்பாகு :
வெல்லம்          1/2கப் 
தண்ணீர்            2 1/4கப் 
சுக்குப்பொடி    1/4தேக்கரண்டி 
ஏலக்காய்          2

கொழுக்கட்டை மாவு :
அரிசி மாவு       1கப் 
எள்                        1மேஜைக்கரண்டி 
கொள்ளு / கானம்                2மேஜைக்கரண்டி 
பொட்டுக்கடலை                2மேஜைக்கரண்டி 
தேங்காய்துருவல் / பல்   2மேஜைக்கரண்டி 
நல்லெண்ணெய் / நெய்    2மேஜைக்கரண்டி 
உப்பு                                          1/4தேக்கரண்டி 

செய்முறை :
# அடிகனமான கடாயில் கானத்தை வெடிக்க துவங்கும்வரை வறுக்கவும்.பின்னர் ஒன்றிரண்டாக பொடித்து அல்லது அப்படியே தனியே எடுத்து வைக்கவும்.


# எள்ளை சிறிது வறுத்து வெடிக்க துவங்கியவுடன் தனியே எடுத்து வைக்கவும்.
# 1/4தேக்கரண்டி நெய்விட்டு தேங்காய்ப்பல் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வதக்கவும்.


1.ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் ,சுக்குப்பொடி ,ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும்வரை மிதமான சூட்டில் கிளறி வடிகட்டியால் வடிகட்டவும். 


2.ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு ,பொட்டுக்கடலை ,வறுத்த கானம் ,எள் ,தேங்காய்ப்பல் ,உப்பு ஆகியவற்றை சேர்த்து சூடான வெல்லப்பாகு சேர்த்து கரண்டியால் கிளறவும்.
அரை மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கையால் ஒன்றுசேர பிசைந்து கையில் ஒட்டாத பதம் வரும்வரை பிசைய வேண்டும்.


2.கையில் சிறிது நெய் தடவி,வெல்ல அரிசி மாவை சிறிதளவு கையில் எடுத்து உருண்டையாக்கி பின்னர் கையின் விரல்கள் பதியுமாறு அழுத்தவும்.



3.இட்லி கடாயில் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும்.இட்லி/கொழுக்கட்டை  தட்டில் சிறிது நெய்/நல்லெண்ணெய் தடவி பிடிகொழுக்கட்டையை அடுக்கிவைத்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் தட்டை அடுக்கி மூடியிட்டு ஆவியில் 10-12நிமிடம் வேகவைக்கவும். 


பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து மெதுவாக தட்டை வெளியே எடுக்கவும்.வெந்த கொழுக்கட்டை பளபளப்புடன் காணப்படும்.

வெல்ல பிடிகொழுக்கட்டை தயார் !!!




உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.





வெல்ல பிடிகொழுக்கட்டை பதிவை ஆங்கிலத்தில் காண Sweet Pidi Kozhukattai