Tuesday, May 23, 2017

அச்சு முறுக்கு l அச்சப்பம் l ரோஸ் குக்கீஸ்



'அச்சு முறுக்கு' என்றதும் அணைவரின் நினைப்பும் சிறு குழந்தையாக இருந்த காலகட்டத்திற்கே செல்லும்.முறுக்கின் சுவை,வடிவம் இவையிரண்டையும் தொட்டு ருசிப்பதற்கு முன்னால் நம் கை அதை உடைத்து கையில் மோதிரமாக அணிவிக்கும்.இப்போதும் கோவில் வாசலில் அச்சை பார்த்தால் இதையெல்லாம் நாம் செய்வோமா? என்று நினைத்ததுண்டு.கனவு நனவானதுபோல் செய்தும் பார்த்தேன்,ருசியும் அமோகம்.
'அள்ள அள்ளக் குறையாதது' போன்று தின்னத்  தின்ன திகட்டாத இந்த அச்சு முறுக்கின் பள்ளி கால நினைவுகள் என் மனதில் அச்சாக பதிந்துள்ளது.

அச்சு முறுக்கு / அச்சப்பம்  :
மாவுக்கலவை தயாரித்து - அச்சை நனைத்து - பொரித்தெடுக்கவும் 
சமைக்க தேவைப்படும் நேரம் : 30நிமிடம் 

வீடியோ :   அச்சு முறுக்கு 


தேவையான பொருட்கள் :


அரிசி மாவு          1கப் 
மைதா                   1//4கப் 
பொடித்த சர்க்கரை   1/2கப் 
எள் / ஜீரகம்         1தேக்கரண்டி 
தேங்காய் பால்   1- 1 1/2கப் 

* பொரிப்பதற்கு எண்ணெய் 
* அச்சு முறுக்கு அச்சு 

செய்முறை :

1.ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,மைதா,பொடித்த சர்க்கரை ,எள் ஆகியவற்றை சேர்த்து கரண்டியால் கிளறவும்.பிரித்தெடுக்கப்பட்ட தேங்காய்ப்பாலை பாதியளவு சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.இப்பொழுது மீதமுள்ள தேங்காய்ப்பாலை சேர்த்து தோசை மாவு பதத்தைவிட சிறிது நீர்த்து கலவை இருக்குமாறு தயாரிக்கவும்.


2.கடாயில் எண்ணெய் ஊற்றி அச்சை அதில் மூழ்குமாறு வைத்து சூடேற்றவும்.மாவு கலவை பாத்திரம் மாற்று முறுக்கு வைக்க தட்டினையும் கடாயின் அருகில் இருக்குமாறு வைக்கவும்.


3.எண்ணெய் சூடானதும் அச்சை எடுத்து மாவுக்கலவையில் 3/4பகுதி மூழ்குமாறு வைக்கவும்,மூழ்கும்போது ஷ்.... சத்தத்துடன் மாவு அச்சில் ஒட்டிக்கொள்ளும்.பின்பு சூடான எண்ணெயில் அச்சை முழுவதும் மூழ்குமாறு வைக்கவும்.


4.எண்ணெயின் நுரை மற்றும் சத்தம் அடங்கியதும் மெதுவாக அச்சை எண்ணெயிலிருந்து எடுத்து கொஞ்சமாக ஆட்ட வேண்டும்.Non -Stick அச்சாக இருந்தால் முறுக்கு தானாகவே ஒட்டாமல் எண்ணெயினுள் விழுந்து விடும்.இரும்பு அச்சாக இருந்தால் கத்தி அல்லது குச்சி உதவியுடன் சிறிது கீழ்நோக்கி குத்தினால் முறுக்கு விழுந்து விடும்.


5.கடாய் பெரிதாக இருந்தால் இன்னொரு அச்சு முறுக்கு வேக வைக்கலாம்,இல்லையேல் அச்சை எண்ணெயில் முழ்குமாறே வைக்கவும்.பொன்னிறமாக அச்சு முறுக்கு வெந்ததும் வெளியே குச்சி அல்லது கண் கரண்டி உதவியுடன் எடுக்கவும்.



6.அச்சு முறுக்கு சூடாக இருக்கும்போது மிருதுவாகவும் ஆறினபின்
  மொறுமொறுப்பாகவும் இருக்கும்.கற்று புகாத டப்பாவினுள் வைக்கவும்.


சுவையான அச்சு முறுக்கு தயார் !!!


குறிப்புகள் :
1.அச்சு முறுக்கு மாவு தயாரித்தப்பின் அதை பரந்த தட்டில் அச்சின் பாதியளவு இருக்குமாறு எடுத்தால் முறுக்கு சுடும்போது சுலபமாக இருக்கும்.அச்சை முழுவதுமாக மாவில் மூழ்கடித்தால் எண்ணெயினுள் வைத்ததும் பொரிந்து முறுக்கு அச்சை விட்டு பிரியாது.மாவில் ஒருவேளை தவறி முழுவதுமாக அச்சு மூழ்கிவிட்டால் அதை கழுவி ,துடைத்து பின்னர் சூடேற்றி பொரித்தெடுக்கவும்.


2.மாவு கலவையை கடாயின் அருகே வைத்தால் முறுக்கு சுட சுலபமாக இருக்கும். 


3.ஒவ்வொரு முறை முறுக்கு அச்சை விட்டு பிரிந்து எண்ணெயினுள் விழுந்ததும் அச்சை எண்ணெயினுள்ளேயே வைக்க வேண்டும்.


4.இரும்பு அச்சாக இருந்தால் ஒரு நாளுக்கு முன்னரே எண்ணெயில் மூழ்கி வைக்க வேண்டும்.
5.தேங்காய் பாலுக்கு பதில் 3மேஜைக்கரண்டி தேங்காய் பவுடரை நீருடன் கலந்து அச்சு முறுக்கு தயாரிக்கலாம்.

மொறுமொறு அச்சு முறுக்கு தயார் !!!



உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.



அச்சு முறுக்கு பதிவை ஆங்கிலத்தில் காண  Achu Muruku  




No comments:

Post a Comment