Wednesday, March 15, 2017

கேரட் அல்வா / Carrot Halwa



கேரட் அல்வா அனைவரும் விரும்பி சாப்பிடும் அல்வா வகையாகும்.பெரும்பாலும் புதிதாய் சமைக்க துவங்கிய அனைவரும் இதையே தேர்ந்தெடுப்பர்.குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை போட்டிபோட்டுக்கொண்டு சாப்பிடுவது கேரட் அல்வாவையே.சிறு வயதிலேயே அனைத்து காய்கறிகளையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி அதன் நன்மையறிந்து விரும்பி சாப்பிடுவதற்கு பழக்கவும்.


கேரட் கண் பார்வை கோளாறுகளை சரி செய்யவும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்,இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை சீராக்கவும்,இரத்த  அழுத்தத்தை குறைப்பதற்கும்,நல்ல செரிமானத்திற்கும் உதவுகிறது.

கேரட் அல்வா / Carrot Halwa :
கேரட்டை துருவி - பால்,சர்க்கரையை சேர்த்து - வேகவிடவும் 
சமைக்க தேவைப்படும் நேரம் : 40நிமிடம் 
பரிமாறும் அளவு : 3பேர் 

தேவைப்படும் பொருட்கள் :


நெய்                         3மேஜைக்கரண்டி 
முந்திரி பருப்பு    4
பாதாம்                    3

கேரட்              3கப் (3பெரிய கேரட் )
பால்                 2கப் 
சர்க்கரை       1கப் 
உப்பு                1சிட்டிகை 
ஏலக்காய்ப் பொடி  1/4தேக்கரண்டி (விரும்பினால் சேர்க்கவும்)

செய்முறை :
# கேரட்டை நன்றாக கழுவி,மேல் மற்றும் அடிப்பாகத்தை சிறிது நறுக்கி,கேரட்டை துருவ வேண்டும்.



1.ஒரு அடிகனமான கடாயில் நெய்,உடைத்த முந்திரி,பாதாம்  சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வதக்கி,தனியே எடுத்து வைக்கவும்.


2.அதே கடாயில் துருவிய கேரட்,உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை(3நிமிடம்) வதக்கவும்.இப்பொழுது கேரட்டின் அளவு சிறிது குறைந்திருக்கும்.


3.பால் சேர்த்து நன்றாக வேகவிடவும்(8நிமிடம்).முழுவதும் அல்லது முக்கால் பாகம் பால் சுண்டும்வரை வேகவிடவும்.


4.சர்க்கரை சேர்த்து கிளறவும்.சர்க்கரை உருகி மேலும் நீர்த்து பின்பு சிறிது கெட்டியாக(5-7நிமிடம்) காணப்படும்.2மேகைக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.


5.ஓரிரு நிமிடங்களில் உள்வாங்கிய நெய் பிரிந்து வெளிவரும் அதோடு அல்வா கடாயின் ஓரத்தில் படாமல் நகர ஆரம்பிக்கும்.இதுவே சரியான அல்வா பதம்.ஏலக்காய் தூள் மற்றும் வறுத்த முந்திரி,பாதாமை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்..


சுவையான கேரட் அல்வா ரெடி!!!



குறிப்புகள் :
1.கண்டென்ஸ்ட் மில்க் (condensed milk ) அல்லது கோயா சிறிது சேர்த்தால் சுவை கூடுதலாகும்.
2.கேரட்டை பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
3.பாலில் காரட் முழுவதும் வெந்தபின்பே சர்க்கரை சேர்க்க வேண்டும்.
4.இந்த அல்வாவை குக்கரில் செய்து 3விசில் வரும் வரை வேகவிடலாம்.



உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.





கேரட் அல்வா பதிவை ஆங்கிலத்தில் காண Carrot Halwa

Saturday, March 11, 2017

ஓமவல்லி இலை பஜ்ஜி / கற்பூரவல்லி பஜ்ஜி / Omavalli Leaves Bajji

ஓமவல்லி இலை   / கற்பூரவல்லி  இலை  / 
Omavalli Leaves / Ajwain Leaves / Country Borage   


ஓமவல்லி பல மருத்துவ குணம் நிறைந்த செடியாகும்.பொதுவாக சளி ,இருமலுக்கு இந்த இலை மற்றும் விதையை ரசம்,கஷாயம்,சட்னி என எல்லாவற்றிலும் சேர்த்து எடுத்து கொள்ளலாம்.தண்ணீரில் இந்த இலை(8-10எண்ணிக்கை)  அல்லது விதையை(ஒரு தேக்கரண்டி) சேர்த்து 10நிமிடம் கொதிக்க வைத்து அதை நுகர்வதால்(ஆவி பிடித்தல் / steam inhalation) சளி ,இருமலுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.இந்த ஓம நீரை பருகுவதால் சளி மற்றும் செரிமான பிரச்சனைகள் தீரும்.


ஓம விதையையும் கறி மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சமைக்கலாம்.இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் கொசு மற்றும் பூச்சித்தொல்லை இருக்காது.சிறு தண்டை நட்டாலே போதுமானது அது பரவலாக நிறைய இலைகளுடன் வளரும்.முடிந்த வரை வீட்டில் கிடைக்கும் மருத்துவ குணம் நிறைந்தவற்றை உபயோகித்து நலம் பெறுவோம்.உணவே மருந்து என்ற கூற்றை நன்கறிந்து அடுத்த தலைமுறைக்கும் விதைப்போம்.


ஓமவல்லி இலை பஜ்ஜி :
ஓம இலையை கழுவி ,உலர்த்தி - பஜ்ஜி மாவில் நனைத்து - எண்ணெயில் பொரித்து எடுக்கவும் .
சமைக்க தேவைப்படும் நேரம் : 15நிமிடம்
பரிமாறும் அளவு : 2-3பேர்

தேவைப்படும் பொருட்கள் :


ஓமவல்லி இலை      25இலை
கடலை மாவு               1/2கப்
அரிசி மாவு                   1மேஜைக்கரண்டி
மிளகாய் தூள்              1மேஜைக்கரண்டி
பெருங்காயத்தூள்     3சிட்டிகை
சோடாப்பு                       2சிட்டிகை
உப்பு                                 3/4தேக்கரண்டி

தண்ணீர்                         1/2கப் + 2மேஜைக்கரண்டி
சூடான எண்ணெய்    1மேஜைக்கரண்டி

எண்ணெய்                    - பொரிப்பதற்கேற்ப

செய்முறை :

1.ஓம இலையை நன்றாக கழுவி கிச்சன் துண்டில் அல்லது பேப்பரில் உலர்த்தவும்.


2.ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய் தூள்,பெருங்காயத்தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறு கரண்டியால் கிளறவும்.அதனுடன் 1/2கப் தண்ணீர்விட்டு கட்டியில்லாமல் கரண்டியால் கெட்டியாக கிளறி, பின்பு மேலும் சிறிது தண்ணீர்விட்டு பஜ்ஜி கலவையை தயார் செய்யவும்.பஜ்ஜி கலவை தோசை மாவு கலவைபோல் இருக்க வேண்டும்.


3.ஒரு அடி கனமான கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடேற்றவும்.எண்ணெய் சூடேறும்பொழுது பஜ்ஜி கலவையுடன் சோடாப்பு,சூடான எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி சேர்த்து நன்றாக கிளறவும்.


ஓம இலையை பஜ்ஜி மாவில் நனைத்து எண்ணெயில் மெதுவாக போட்டு 30-40நொடி வரை அல்லது எண்ணெய் நுரை அடங்கியதும் கரண்டியின் உதவியுடன் திருப்பிப் போடவும்.பின்னர் 15நொடி வரை அல்லது பழுப்பு நிறமானதும்  எடுத்து கிச்சன் பேப்பரில் வைக்கவும்.


சூடான ஓமவல்லி பஜ்ஜி தயார் !!!


தேங்காய் சட்னி ,தக்காளி கெட்ச்அ-ப் அல்லது சூடான டீ -யுடன் பரிமாறலாம்.

குறிப்பு :
1.பஜ்ஜி கலவை மிகவும் கெட்டியாகவோ அல்லது தண்ணீர்விட்டோ இல்லாமல் சரியான பிசத்தில் இருக்க வேண்டும்.
2.பஜ்ஜிக்கு மாவு தயார் செய்யும்போது முதலில் சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாக கட்டியில்லாமல் கரைத்து பின்னர் கொஞ்சம் தண்ணீர்விட்டு சரியான பதத்திற்கு கொண்டு வரவும்.
3.மிதமான தீயில் பஜ்ஜியை பொரித்தெடுக்கவும்.
4.இந்த கலவையில் வெங்காயம்,வாழைக்காய் ,கத்திரிக்காய் ஆகியவற்றையும் உபயோகித்து பஜ்ஜி தயார் செய்யலாம்.




உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.



ஓமவல்லி பஜ்ஜி பதிவை ஆங்கிலத்தில் காண omavalli leaves bajji




Monday, March 6, 2017

பால் கொழுக்கட்டை / Paal kozhukattai



பால் கொழுக்கட்டை பொதுவாக விநாயகர் சதுர்த்தியன்று செய்யப்படும் சுவை மிகுந்த இனிப்பான பால் கலவையாகும்.அனைவருக்கும் பிடித்தமான இந்த பால்கொழுக்கட்டை செட்டிநாட்டிலிருந்து பரவலாக்கப்பட்ட இனிப்பு வகையாகும்.சத்தான  இந்த கொழுக்கட்டை வகையை சாயங்காலம் பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.நான் சிறு வயது முதல் மிகவும் ரசித்து ,சுவைத்து மகிழ்ந்தது அம்மாவின் கைவண்ணத்தில் இந்த பால் கொழுகட்டையே !!!.பேறுகால மாதங்களிலும் நினைத்து உருகியது இதற்காகவே !!!பால் கொழுகட்டை அம்மாவின் கைமணத்தில் ...


இந்த சுலபமான சுவையான பால் கொழுக்கட்டையை செய்துபார்த்து ருசிக்கவும்.

பால் கொழுக்கட்டை :
 அரிசி மாவு உருண்டை தயாரித்து - பாலில் வேகவைக்கவும் - தேங்காய்ப்பால் சேர்க்கவும்
சமைக்க தேவைப்படும் நேரம் : 45நிமிடம்

 தேவையான  பொருட்கள் :

* அரிசி உருண்டைகள் :
அரிசி மாவு    1கப்
தண்ணீர்          1 1/2கப்
நல்லெண்ணெய் / நெய்      3சொட்டு
உப்பு                  1/4தேக்கரண்டி

* தேங்காய்பால் கலவை :
பால்                    1 1/2கப்
தண்ணீர்            1 1/2கப்
சர்க்கரை           3/4கப்
தேங்காய்பல்  3/4கப்  (+ 1/2கப் தண்ணீர் )
ஏலக்காய்         1/2தேக்கரண்டி

செய்முறை :
* அரிசி உருண்டை செய்முறை :
1.ஒரு பாத்திரத்தில் நீர் ,உப்பு சேர்த்து கொதி வரும் வரை சூடேற்றி அடுப்பை அணைக்கவும்.ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு சேர்த்து அதனுடன் சூடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டியால் கிளறவும்.பின்பு மிதமான சூட்டிற்கு வந்ததும் கையால் பிசைந்து மாவு இருக்கமானதாகவும்,கையில் ஒட்டாமலும் வந்தவுடன் எண்ணெய்/நெய் சேர்த்து பிசைந்து வைக்கவும்.உள்ளங்கையில் சிறிதளவு மாவை வைத்து சிறு உருண்டைகளாக்கவும்.
[தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி மாவை கிளறவும்,தண்ணீர் மீதமும் வரலாம்.]


* தேங்காய்ப்பால் கலவை :
2.பால் மற்றும் தண்ணீரை ஒரு அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து. சூடேற்றி கொதி வந்ததும் அடுப்பை குறைவான அளவில் வைத்து சமைக்கவும்.அரிசி மாவு உருண்டைகளை மெதுவாக பாலில் சேர்த்து  7-8நிமிடம் வரை வேகவிடவும்.
[பாலில் சேர்க்கும் முன் 2 அரிசி உருண்டைகளை தனியே எடுத்து வைக்கவும்.]


3.மிக்ஸி ஜாரில் 3/4கப் தேங்காயை எடுத்து கொரகொரப்பாக தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.2மேஜைக்கரண்டி தேங்காய் துருவலை எடுத்து தனியே வைத்து விட்டு 1/2கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பின்பு தேங்காய்ப்பாலை வடிகட்டியில் பிரித்து எடுக்கவும்.
தனியே எடுத்து வைத்த 2உருண்டைகளை சிறிது தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும்.


4.முதலில் உருண்டைகள் அடியில் தங்கியும் வெந்தபின் பாலில் மிதந்தும் காணப்படும்.வெந்ததை உறுதி செய்ய ஒரு உருண்டையை எடுத்து கத்தியால் இரு துண்டாக்கி பார்க்கவும்,நன்றாக வெந்த உருண்டை நிறம் மங்கியும்,வேகாதது உருண்டையின் நடுப்பகுதியில் பளீச் வெள்ளை நிறத்துடனும் காணப்படும்.
அதனுடன் சர்க்கரை,அரிசி மாவு கலவை சேர்த்து 2நிமிடம் வரை கொதிக்க விடவும்.


5.தேங்காய்பால் ,தேங்காய் துருவல்,ஏலக்காய் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.



பால் கொழுக்கட்டை தயார் !!!



குறிப்பு :
1.தேங்காய்பால் அரைக்கும்பொழுது 2மேகைக்கரண்டி எடுத்து வைக்காமல்,தேங்காயை துறவியும் போடலாம்.
2.தேங்காய்ப்பால் சேர்த்தப்பின் ஓரிரு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்  அல்லது தெரிந்து விடும்.
3.அரிசி உருண்டை வேகும்பொழுது மூடியை சிறிது இடைவெளிவிட்டு மூடவும் அல்லது பால் பொங்கி வழியும். 
4.சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம்(1கப்) சேர்க்கும் பொழுது தண்ணீர்,ஏலக்காய் சேர்த்து சூடேற்றி வெள்ளம் கரைந்தப்பின் அதை வெந்த அரிசி உருண்டைகளுடன் வடிகட்டி பின் சேர்க்கவும்.
5.அரிசி உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வேக வைத்தும் பாலில் சேர்க்கலாம் அல்லது இந்த முறை உபயோகித்து பாலில் வேகாவிடலாம்.


உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.




பால் கொழுக்கட்டை பதிவை ஆங்கிலத்தில் காண Paal Kozhukattai .