Sunday, January 8, 2017

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் !!!



சக்கரை பொங்கல் / Sweet Pongal  பெரும்பாலும் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் ஒரு இனிப்பு பொங்கலாகும்.தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் அன்று கிராமப்புறங்களில், நெற்கதிர்கள் நல்முறையில் அறுவடை செய்யப்பட்ட ஆனந்தத்தை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக விவசாயிகள் கொண்டாடுகிறார்கள்.'மார்கழி' மாத இறுதி நாளிலிருந்து 'தை' மாதம் மூன்றாம் நாள் வரை மொத்தம் நான்கு நாட்கள் கிராமப்புறங்களில்  திருவிழாக்கோலம்தான்.


போகிப் பொங்கல் (முதல் நாள் )
தைப் பொங்கல் (இரண்டாம் நாள்)
மாட்டுப் பொங்கல் (மூன்றாம் நாள்)
காணும் பொங்கல் (நான்காம் நாள்)

* போகிப் பொங்கலன்று மக்கள் பழையன கழித்து, வீட்டை சுத்தம் செய்து வெள்ளை அடித்து புதியன புகுவார்கள்.

தைப் பொங்கலன்று ,கண்ணுக்கு விருந்தாக சுண்ணாம்பு கோலமும் ,புத்தாடை உடுத்தியும் ,வீட்டிற்கு வெளியே மாவிலை  தோரணமும் ,வாசலிற்கு இருபுறமும் வாழை மரம்,கரும்பு   நட்டியும் ,வெண்கலப் பானையில்/மண்பானையில் பொங்கல் விடுவார்கள்.பொங்கற்ப்பானையின் வெளிப்புறத்திலும் கைவண்ணம் காட்டப்பட்டிருக்கும்,கழுத்தில் மஞ்சள் குழையுடன்.பொங்கற்பானையிலிருந்து பொங்கிவரும் பொங்கல் ,அக்கணத்தில் பெண்கள் எழுப்பும் ஆனந்த கூவல்  குலமகளுக்கே சொந்தமாகும்.


* மாட்டுப்பொங்கலன்று ஏர் உழுத மாட்டிற்கு நன்றி சொல்லும் விதமாக குளிப்பாட்டி ,கொம்பிற்கு வண்ணமிட்டு ,கழுத்தில் மணி அணிவித்து , சந்தனத்தை குழைத்து ,குங்குமம் சேர்த்து நெற்றியில் திலகமிட்டு கொண்டாடப்படும்.

* காணும் பொங்கலன்று சிறந்த அறுவடைக்காக உதவிய உற்றார் ,உறவினர் அனைவரையும் சந்திக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.


பொதுவாக அனைத்து கிராமங்களிலும் பொங்கல் போட்டிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.இந்த தலைமுறையில் நகர்புறத்தில் வசிப்பதாலும் ,சுலபமான முறைக்காகவும் குக்கர் பொங்கல் செய்கிறோம்.


சக்கரை பொங்கலன்று புதிதாக அறுவடை செய்த பச்சரிசி உபயோகித்து,சிறுபருப்பு  ,சுவையூட்ட வெல்லம்,தேங்காய்,ஏலக்காய்   சேர்த்து பொங்கல் செய்யப்படுகிறது.நெய்யில் முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்க்கப்படும்.சக்கரை பொங்கல்,வெள்ளை பொங்கல் என இரு பொங்கல் தனித்தனி பானைகள் வைத்து பொங்கல் விடப்படும்.வெள்ளை பொங்கல் வெல்லம் ,பழம் ,நெய் சேர்த்து பரிமாறப்படும்.
தை மாதம் புதிதாக அறுவடை செய்யப்பட்ட காய்கள் ,கிழங்கு வகைகள் அனைத்தையும் ஒற்றைப்படை எண்ணில் சேர்த்து பொங்கல் கூட்டு குழம்பு செய்வார்கள்.
என் கிராம பொங்கல் கொண்டாட்டத்தை எழுத்து வடிவில் சமர்பித்ததால் பெருமையடைகிறேன்.



 பொங்கல் திருநாள் அன்று செய்யப்படும் சிலவகையான சமையல் .

சக்கரை பொங்கல் 
      வீடியோ : குக்கர் சக்கரை பொங்கல் 

வெண்  பொங்கல் 
* தேங்காய் சட்னி 
இட்லி சாம்பார் 
பருப்பு வடை 
* மெது /உளுந்து  வடை

* ஏழு காய்கறி சாம்பார் / பொங்கல் கூட்டு குழம்பு  [அறுவடை செய்யப்பட்ட அனைத்து காய்கள்,கிழங்குகள் சேர்த்து செய்யப்படும் சாம்பார் இது]
              லஞ்ச் சாம்பார் 

அவியல் , பொரியல் 
              சிறுகிழங்கு பொரியல்
              அவரைக்காய் பொரியல் 
              வாழைக்காய் பொரியல் 
              பீட்ரூட் பொரியல் 
              சேனை கிழங்கு மசியல் 

* பாயசம் 
              அரிசி-தேங்காய் பாயசம் (வீடியோ )
              சேமியா பாயசம்
              அவல் பாயசம்  
              ஜவ்வரிசி பாயசம் 

* கேசரி 
              பைன் ஆப்பிள்  கேசரி 
              கோதுமை கேசரி (வீடியோ)

பூஜை அறை சிறிய கோலம் 




Monday, January 2, 2017

நெய் அப்பம் / Ghee Appam




நெய் அப்பம் பொதுவாக கார்த்திகை தீபம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி அன்று படைக்கப்படும் நெய்வேதியமாகும்.அப்பத்தில் தேங்காய் ,பழம் சேர்க்கப்படுவதால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.கார்த்திகை தீபம் அன்று அம்மா கையால் போடப்படும் கோலம்,ஏற்றப்படும் விளக்கு ,ஏற்றப்படும் விளக்கை யார் வரிசையாய் வீட்டிற்கு முன் ,வீட்டினுள்,மாடிப்படியில் வைப்பார் என சிறு குழந்தைகளிடையே ஏற்படும் ஆர்வம் ,அனைத்துமே தீபம் போல்  பிரகாசிக்கும் அழகுதான்.



இந்த சுலபமான நெய் அப்பத்தை செய்துபார்த்து ருசிக்கவும்.

நெய்  அப்பம் :
பச்சரிசியை  ஊறவைத்து ,அரைக்கவும்   - வெல்லப்பாகுடன்  மற்றவை சேர்த்து  - அப்பம் செய்யவும்
ஊறவைக்கும்  நேரம்  : 3மணி  நேரம் 
சமைக்க  தேவைப்படும்  நேரம்  : 30நிமிடம்
அப்பம் எண்ணிக்கை : 15

நெய் அப்பம் வீடியோ :



தேவையான  பொருட்கள்   : 1கப் = 250மில்லி / 225கிராம் 
நெய்   -   3மேஜைக்கரண்டி  
நல்லெண்ணெய்    -  2மேஜைக்கரண்டி

பச்சரிசி   -   1கப் 
பொடித்த வெல்லம்   -  1கப் 
தண்ணீர்   -  1+2மேஜைக்கரண்டி
பழுத்த வாழைப்பழம்   - 1
தேங்காய்  -  1/4கப் 
துருவிய தேங்காய் / தேங்காய்ப்பல்   -   2மேஜைக்கரண்டி 
ஏலக்காய்   2
சோடா உப்பு / ENO  உப்பு   -  2சிட்டிகை 
உப்பு   -  2சிட்டிகை 

செய்முறை  :
# வெல்லத்தை பொடித்துக்கொள்ளவும். 
# முதலில் அரிசியை நன்றாக கழுவிவிட்டு,போதுமான தண்ணீர்விட்டு 3மணி நேரம் ஊற வைக்கவும்.


1.பொடித்த வெல்லத்தை  ஒரு பாத்திரத்தில் எடுத்து,அதனுடன் ஒரு தேக்கரண்டி தண்ணீர் விட்டு மிதமான  தீயில் சூடு பண்ணவும்.வெல்லம்  முழுவதுமாக கரையும்வரை கரண்டியால் கிளறவும்.அடுப்பை அணைத்துவிட்டு வெல்லப்பாகுவை வடிகட்டியால்  வடிகட்டவும்.


2.ஊறவைத்த அரிசியில் உள்ள நீரை முழுவதுமாக வடிக்கவும்.
மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி,தேங்காய்,ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து,அதனுடன் சிறிது (1-2தேக்கரண்டி) தண்ணீர்விட்டு  கொரகொரப்பாக ரவை பதத்துக்கு கெட்டியாக அரைக்கவும்.


3.அரைத்த மாவு,மசித்த வாழைப்பழம் ,தேங்காய் துருவல் ,வெல்லப்பாகு ,உப்பு,சோடா அனைத்தையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்து  கிளறவும்.
மாவுப்பதம் தோசை  மாவு பதத்தைவிட சிறுது கெட்டியாக இருக்க வேண்டும் .
[நெய் அப்பம் செய்யும் முன் சோடா சேர்த்தால் போதும் அல்லது 3மணி நேரம் புளிக்க வைக்கவும்]


4.[கடாயில் நெய்/நல்லெண்ணெய் ஊற்றி பொரித்தும் எடுக்கலாம் அல்லது பணியாரக்கல்லில் செய்யலாம்]
* பணியார கல்லை மிதமான தீயில் சூடேற்றி ,ஒவ்வொரு குழியிலும் 1/2தேக்கரண்டி நெய்விடவும்.சிறு கரண்டியால் மாவை எடுத்து 3/4குழி அளவு நிரப்பி,சிறிது நெய்யிட்டு மூடி வைக்கவும்.


 * இரண்டு நிமிடம் கழித்து மூடியை எடுக்கவும்,அப்பம் உப்பியிருப்பதை பார்க்கலாம்.சிறிது நெய்யிட்டு மெதுவாக பணியார இடுக்கியால்   திருப்பி போடவும்.ஒரு நிமிடம் கழித்து,மெதுவாக கல்லிலிருந்து எடுக்கவும்.
[அப்பம் முழுவதுமாக வெந்ததை அப்பம் நடுவே குச்சி/கத்தி உதவியுடன்  பார்த்த்து,சுத்தமாக வந்தால் ,அது ரெடி ]

சுவையான  நெய் அப்பம் ரெடி !!!



குறிப்புகள்  :
1.நெய்யை குறைத்து நல்லெண்ணையை சேர்த்து கொள்ளலாம்.
2.ஏலக்காய் பௌடரும் சேர்க்கலாம்.
3.பணியாரத்தை திருப்பும்போது இனொரு கையில் ஸ்பூன் / கத்தி வைத்து கொள்ளலாம்.
4.கொரகொரப்பாக அரைக்கப்படும்  மாவு பராம்பரிய சுவை மற்றும் பதத்தை தரும்.
5. ஆறிய பணியாரம் கூடுதல் சுவையை தரும்.
6.மாவை அரைக்கும்போது அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம் ஏனெனில் வெல்லப்பாகு சேர்ந்தவுடன்  மாவு சரியான பணியார பதத்துக்கு வந்து விடும்.தண்ணீர் அதிகமானால் சிறிதளவு கோதுமை மாவு சேர்க்கவும்.
7.இனிப்பு சுவையை மேலும் தூக்கலாக்குவதற்கு உப்பு இனிப்பு பண்டங்கள் செய்கையில் சேர்க்கப்படுகிறது.



உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.


நெய் அப்பம் பதிவை ஆங்கிலத்தில் காண Ghee Appam .