Saturday, February 25, 2017

காய்கறி சாதம் / Vegetable Rice




காய்கறி சாதம் அனைவரும் விரும்பி சமைக்கும் ஒரு சுலபமான சாதமாகும்.காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து தேங்காய்ப்பாலுடன் சமைப்பதால் சத்து நிறைந்த உணவாகிறது.இந்த சாதத்தை அப்பளம்,வெங்காய தயிர் பச்சடி மற்றும் பக்கோடாவுடன் பரிமாறலாம்.பாஸ்மதி அரிசி மற்றும் சாப்பாடு அரிசி இரண்டும்  உபயோகித்து செய்யலாம்,சிறிது தண்ணீர் அளவு மாறுபடும்.

காய்கறி சாதம் / Vegetable Rice :
அரிசியை ஊறவைக்கவும் - காய்கறியுடன் வதக்கி - குக்கரில் வேகவிடவும்
சமைக்க தேவைப்படும் நேரம் : 30நிமிடம் 
{ அரிசி ஊறவைக்கும் நேரம் :
சாப்பாடு அரிசி - 10நிமிடம் 
பாஸ்மதி அரிசி - 20நிமிடம் }

தேவையான பொருட்கள் :

சாப்பாட்டு அரிசி   1கப் 
[பாஸ்மதி அரிசியும் உபயோகிக்கலாம்]

எண்ணெய்     1மேஜைக்கரண்டி 
நெய்                  1மேஜைக்கரண்டி 
லவங்கம்/கிராம்பு   2
பட்டை                         1/2"இன்ச் 
ஏலக்காய்                   1
பிரியாணி இலை    1
நட்சத்திர சோம்பு    1


பச்சை மிளகாய்             1
பெரிய வெங்காயம்      1
புதினா இலை                  1கையளவு 
தக்காளி                             1
இஞ்சி-பூண்டு விழுது  1தேக்கரண்டி 
காய்கறிகள்                      1கப்  
[கேரட் ,பீன்ஸ் ,பட்டாணி ,உருளைக் கிழங்கு,காலிஃப்ளார்]
தயிர்                                    1மேஜைக்கரண்டி  
மஞ்சள் பொடி                  1/4தேக்கரண்டி 
மிளகாய் தூள்                  1தேக்கரண்டி 
கொத்தமல்லி தூள்        2தேக்கரண்டி 
தண்ணீர்                              1கப் 
தேங்காய்ப் பால்              1கப் 
உப்பு                                      1தேக்கரண்டி 
கொத்தமல்லி தழை       1/2கையளவு 

[மிளகாய் தூள் ,கொத்தமல்லி தூளை தவிர்த்து பிரியாணி மசாலா 4தேக்கரண்டி சேர்க்கலாம்]

செய்முறை :

# அரிசியை கழுவி 10நிமிடம் ஊற வைக்கவும்.
# காய்கறிகளை நன்கு கழுவி வெங்காயம் ,பச்சை மிளகாய் ,தக்காளியை நீளவாக்கிலும், மற்றவை அனைத்தையும் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
# புதினா மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை  கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
#  தேங்காய்ப்பாலை பிரித்தெடுக்கவும்.

1.குக்கரை அடுப்பில் வைத்து மிதமான தீயில்  சூடேற்றி ,எண்ணெய் ,1/2தேக்கரண்டி நெய்,லவங்கம் ,பட்டை,ஏலக்காய்,நட்சத்திர சோம்பு,பிரியாணி இலை அனைத்தையும் சேர்த்து 1/2நிமிடம் வதக்கி பின்னர் பச்சை மிளகாய்,புதினா இலை,வெங்காயத்தை சேர்க்கவும்.வெங்காயம் பழுப்பு நிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து,மசியும் வரை வதக்கவும்.


2.இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் தயிர்,மசாலா பவுடர்,காய்கறி அனைத்தையும் சேர்த்து அடி பிடிக்காமல் 3நிமிடம் வதக்கவும்.


3.ஊறவைத்த அரிசியிலிருந்து தண்ணீரை நன்கு வடித்துவிட்டு,குக்கரில் சேர்த்து 2நிமிடம் உடையாமல் வதக்கவும்.தண்ணீர்,தேங்காய்ப்பால்,உப்பு சேர்க்கவும்.


4.கொதி வந்தவுடன் குக்கரை மூடி 2விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.


நெய் (1/2தேக்கரண்டி),கொத்தமல்லி தழை சேர்த்து விரவி வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.


சுவையான காய்கறி சாதம் தயார் !!!


குறிப்புகள் :

1.பாஸ்மதி அரிசி உபயோகித்தால் 1/2கப் தண்ணீர் மற்றும் 1கப் தேங்காய்ப்பால் சேர்த்து 2விசில் வரை சமைக்கவும்.
2.ஊறவைத்த அரிசியை நன்கு வடித்துவிட்டு வாணலியில் நெய் சேர்த்து 2நிமிடம் வதக்கி பின்னர் பிரியாணி செய்தால் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் ,பளபளப்பாகவும் வரும்.
3,எலுமிச்சம்பழம் சாறு (1/2) சேர்த்து பரிமாறலாம்.
4.மிளகாய் தூள் ,கொத்தமல்லி தூளை தவிர்த்து பிரியாணி மசாலா 4தேக்கரண்டி சேர்க்கலாம்.


உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பதிவை ஆங்கிலத்தில் காண Vegetable Rice


Sunday, February 12, 2017

கீரை வடை / தண்டுக்கீரை வடை / Spinach Vadai



கீரை வடை,தேங்காய் சட்னி ,இஞ்சி-ஏலக்காய் தட்டிப் போட்ட சூடான டீ,ஜன்னலுக்கு வெளியே மழையின் மேள-தாளம்,மிதமான ஓசையில்  பிடித்தமான பாட்டு,இவையணைத்தும் ஒரே நேரத்தில் அமைந்தால்........ நினைத்துப் பார்ப்பதற்கே மெய் சிலிர்க்கிறது.வழக்கமாக செய்யும் கீரை பொரியல் ,கீரை கூட்டு ,கீரை குழம்பு  அல்லாமல் ஒரு மாற்றத்திற்கு இந்த ஆரோக்கியமான கீரை வடையை  செய்து  ருசித்து பார்க்கவும்.இரும்புச்சத்து ,புரோட்டீன் நிறைந்த இந்தக் கீரை வடையை எந்த வகை கீரை உபயோகித்தும் செய்யலாம்.  


கீரை வடை :
பருப்பை ஊறவைக்கவும் - கீரையுடன் மற்றவை சேர்த்து - எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 
பருப்பு ஊறவைக்கும் நேரம் : 3மணி  நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 20நிமிடம்
வடை எண்ணிக்கை : 6-7

கீரை வடை : வீடியோ 


தேவையான  பொருட்கள்   : 1கப் = 250மில்லி / 225கிராம் 

கீரை                                       -  1கட்டு (2கப் இறுக்கமான அளவு)
[தண்டுக்கீரை  / amaranthus உபயோகித்துள்ளேன் ,எந்த வகை கீரையும் உபயோகிக்கலாம்] 

கடலை பருப்பு                    -  1கப் 
சோம்பு  / பெருஞ்சீரகம்   -  1தேக்கரண்டி 
காய்ந்த மிளகாய்              -   5 (உருண்டை வடிவம் உபயோகித்துள்ளேன்)
இஞ்சி                                    -   1"இன்ச் / 1தேக்கரண்டி 

பெரிய வெங்காயம்          -   1
கறிவேப்பிலை                   -  1இணுக்கு 
கொத்தமல்லி தழை         -  1இணுக்கு 
உப்பு                                       -   1தேக்கரண்டி 

எண்ணெய்                          -   பொரிக்க தேவையான அளவு 

செய்முறை  :


# கடலை  பருப்பை  நன்கு கழுவி 3மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
# கீரைத் தண்டின் அடிப்பாகத்தை சிறிது நறுக்கிவிட்டு ஓடு தண்ணீரில் கீரையை அலசவும்.அதன் பிறகு கீரையை தண்டுடன்  சிறிதாக நறுக்கவும்.


# கழுவிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை, இஞ்சி,வெங்காயம் அணைத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

1.ஊறிய பருப்பிலிருந்து நீரை நன்கு வடித்துவிட்டு,வாயகன்ற பாத்திரத்தில் 1மேஜைக்கரண்டி அளவு ஊறிய பருப்பை  எடுத்து  வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் பெருஞ்சீரகம்,காய்ந்த மிளகாய் ,இஞ்சி,பாதியளவு பருப்பு சேர்த்து கொரகொரப்பாக பல்ஸ் /pulse -ல்  வைத்து 5-6முறை அரைக்கவும். கொரகொரப்பான விழுதை பாத்திரத்தில் சேர்க்கவும்.மீதமுள்ள பருப்பையும் இதேபோல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.


[3மணி நேரம் ஊற வைப்பதால் அரைக்கும்பொழுது தண்ணீர் தேவைப்படாது.ஒவ்வொரு முறை அரைத்த பின்னரும் ஜாரின் உள் விளிம்பை வழித்து ஒன்றுசேர அரைக்கவும்]

2.கீரை,கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை,வெங்காயம்,உப்பு அணைத்தையும்  பருப்புடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.உப்பு மற்றும் கார அளவை சரி செய்ய சிறிது ருசி பார்க்கலாம்.தேவையான அளவு அரைத்த விழுதை கையில் எடுத்து முதலில் உருண்டையாக உருட்டி பின்னர் அதைத் தட்டி மற்றொரு தட்டில் வைத்து கொள்ளவும்.


3.கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடேற்றவும்.சிறிதளவு மாவை எண்ணெயில் போட்டவுடன் அது உடனடியாக பொரிந்து மேலே வந்தால் எண்ணெய் பொரிப்பதற்கு தயார் நிலையில் உள்ளது என்று அர்த்தம்.



தட்டி வைத்த வடையை 3-4எண்ணிக்கையாக (அல்லது உங்கள் கடாயின் அளவுக்கேற்ப) மெதுவாக போட்டு 1 1/2 - 2நிமிடம் வரை வேக வைக்கவும்.வடை பொன்னிறமாக வந்ததும் கரண்டியின் உதவியுடன் திருப்பி  போட்டு 1/2-1நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.எண்ணெயை உறிய பேப்பர் டவலில் வடையை சிறிது நேரம் வைக்கவும்.

சூடாக பரிமாறவும்.

சூடான,சுவையான கீரை வடை ரெடி !!!


குறிப்புகள் :
1.பருப்பை 3மணி நேரம் ஊறவைப்பதால் அரைக்கும் பொழுது தண்ணீர் தேவைப்படாது.தேவைப்பட்டால் 1மேஜைக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும்.
2.பெருஞ்சீரகம் சேர்ப்பது ஜீரணத்துக்கு மட்டுமல்லாது வடைக்கு நல்ல மணத்தை கொடுக்கும்.
3.கீரையை ஓடுதண்ணீரில் கழுவுவதே வழக்கம்.காய்கறிகளை கழுவிய பின்னரே நறுக்க வேண்டும்.நறுக்கிய பின்னர் கழுவினால் சில சத்துகள் அழிந்து விடும்.
4.வடைக்கு கீரையின் இலைப்பகுதியை மட்டும் உபயோகித்து தண்டுப்பகுதியை  சாம்பார் மற்றும் புளிக்குழம்பில் சேர்க்கலாம்.
5.எண்ணெயை உறிய பேப்பர் டவல்/tissue பேப்பர் உபயோகிக்கவும்.நாளிதழ் / newspaper உபயோகிப்பதால் மையின் ஆச்சு பதிந்து உணவு விஷத்தன்மையானதாகிறது.


உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.



இந்தப் பதிவை ஆங்கிலத்தில் காண Keerai Vadai / Spinach Vadai .