நெய் அப்பம் பொதுவாக கார்த்திகை தீபம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி அன்று படைக்கப்படும் நெய்வேதியமாகும்.அப்பத்தில் தேங்காய் ,பழம் சேர்க்கப்படுவதால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.கார்த்திகை தீபம் அன்று அம்மா கையால் போடப்படும் கோலம்,ஏற்றப்படும் விளக்கு ,ஏற்றப்படும் விளக்கை யார் வரிசையாய் வீட்டிற்கு முன் ,வீட்டினுள்,மாடிப்படியில் வைப்பார் என சிறு குழந்தைகளிடையே ஏற்படும் ஆர்வம் ,அனைத்துமே தீபம் போல் பிரகாசிக்கும் அழகுதான்.
இந்த சுலபமான நெய் அப்பத்தை செய்துபார்த்து ருசிக்கவும்.
பச்சரிசியை ஊறவைத்து ,அரைக்கவும் - வெல்லப்பாகுடன் மற்றவை சேர்த்து - அப்பம் செய்யவும்
ஊறவைக்கும் நேரம் : 3மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 30நிமிடம்
அப்பம் எண்ணிக்கை : 15
அப்பம் எண்ணிக்கை : 15
நெய் அப்பம் வீடியோ :
தேவையான பொருட்கள் : 1கப் = 250மில்லி / 225கிராம்
நெய் - 3மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் - 2மேஜைக்கரண்டி
பச்சரிசி - 1கப்
பொடித்த வெல்லம் - 1கப்
தண்ணீர் - 1+2மேஜைக்கரண்டி
பழுத்த வாழைப்பழம் - 1
தேங்காய் - 1/4கப்
துருவிய தேங்காய் / தேங்காய்ப்பல் - 2மேஜைக்கரண்டி
ஏலக்காய் 2
சோடா உப்பு / ENO உப்பு - 2சிட்டிகை
உப்பு - 2சிட்டிகை
செய்முறை :
# வெல்லத்தை பொடித்துக்கொள்ளவும்.
# முதலில் அரிசியை நன்றாக கழுவிவிட்டு,போதுமான தண்ணீர்விட்டு 3மணி நேரம் ஊற வைக்கவும்.
1.பொடித்த வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து,அதனுடன் ஒரு தேக்கரண்டி தண்ணீர் விட்டு மிதமான தீயில் சூடு பண்ணவும்.வெல்லம் முழுவதுமாக கரையும்வரை கரண்டியால் கிளறவும்.அடுப்பை அணைத்துவிட்டு வெல்லப்பாகுவை வடிகட்டியால் வடிகட்டவும்.
2.ஊறவைத்த அரிசியில் உள்ள நீரை முழுவதுமாக வடிக்கவும்.
மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி,தேங்காய்,ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து,அதனுடன் சிறிது (1-2தேக்கரண்டி) தண்ணீர்விட்டு கொரகொரப்பாக ரவை பதத்துக்கு கெட்டியாக அரைக்கவும்.
3.அரைத்த மாவு,மசித்த வாழைப்பழம் ,தேங்காய் துருவல் ,வெல்லப்பாகு ,உப்பு,சோடா அனைத்தையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கிளறவும்.
மாவுப்பதம் தோசை மாவு பதத்தைவிட சிறுது கெட்டியாக இருக்க வேண்டும் .
[நெய் அப்பம் செய்யும் முன் சோடா சேர்த்தால் போதும் அல்லது 3மணி நேரம் புளிக்க வைக்கவும்]
4.[கடாயில் நெய்/நல்லெண்ணெய் ஊற்றி பொரித்தும் எடுக்கலாம் அல்லது பணியாரக்கல்லில் செய்யலாம்]
* பணியார கல்லை மிதமான தீயில் சூடேற்றி ,ஒவ்வொரு குழியிலும் 1/2தேக்கரண்டி நெய்விடவும்.சிறு கரண்டியால் மாவை எடுத்து 3/4குழி அளவு நிரப்பி,சிறிது நெய்யிட்டு மூடி வைக்கவும்.
* இரண்டு நிமிடம் கழித்து மூடியை எடுக்கவும்,அப்பம் உப்பியிருப்பதை பார்க்கலாம்.சிறிது நெய்யிட்டு மெதுவாக பணியார இடுக்கியால் திருப்பி போடவும்.ஒரு நிமிடம் கழித்து,மெதுவாக கல்லிலிருந்து எடுக்கவும்.
[அப்பம் முழுவதுமாக வெந்ததை அப்பம் நடுவே குச்சி/கத்தி உதவியுடன் பார்த்த்து,சுத்தமாக வந்தால் ,அது ரெடி ]
சுவையான நெய் அப்பம் ரெடி !!!
குறிப்புகள் :
1.நெய்யை குறைத்து நல்லெண்ணையை சேர்த்து கொள்ளலாம்.
2.ஏலக்காய் பௌடரும் சேர்க்கலாம்.
3.பணியாரத்தை திருப்பும்போது இனொரு கையில் ஸ்பூன் / கத்தி வைத்து கொள்ளலாம்.
4.கொரகொரப்பாக அரைக்கப்படும் மாவு பராம்பரிய சுவை மற்றும் பதத்தை தரும்.
5. ஆறிய பணியாரம் கூடுதல் சுவையை தரும்.
6.மாவை அரைக்கும்போது அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம் ஏனெனில் வெல்லப்பாகு சேர்ந்தவுடன் மாவு சரியான பணியார பதத்துக்கு வந்து விடும்.தண்ணீர் அதிகமானால் சிறிதளவு கோதுமை மாவு சேர்க்கவும்.
7.இனிப்பு சுவையை மேலும் தூக்கலாக்குவதற்கு உப்பு இனிப்பு பண்டங்கள் செய்கையில் சேர்க்கப்படுகிறது.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.
நெய் அப்பம் பதிவை ஆங்கிலத்தில் காண Ghee Appam .
No comments:
Post a Comment