பச்சைப்பயறு புரதச்சத்து,இரும்புச்சத்து நிறைந்த பயறாகும்.இது உடல் எடை குறைக்கவும்,இரத்த அழுத்தத்தை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.பச்சைப்பயறு தோசை ஆந்திராவில் மிகவும் பிரபலமான காலை உணவாகும்.இதை பெசரட்டு தோசை / Pesarattu Dosai என்று அழைப்பர்.இதனுள் உப்புமாவை சேர்த்து பரிமாற்றப்படும் தோசை MLA Pesarattu என அழைக்கப்படுகிறது.குழந்தைகளுக்கு சிறு வயது முதல் பயறு வகைகளை அறிமுகப்படுத்தி அதன் பயன்களை கூற வேண்டும்.இதில் வெங்காயம் சேர்த்து வார்ப்பதால் சுவை மிகும்.பச்சைப்பயறு தோசையை இஞ்சி சட்னி ,புளி சட்னி மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.
பச்சைப்பயறு தோசை :
பயறை ஊறவைத்து - மசாலா சேர்த்து - தோசை வார்க்கவும்
ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 8மணி நேரம் (அ ) இரவு முழுவதும்
சமைக்க தேவைப்படும் நேரம் : 30நிமிடம்
தோசையளவு : 5எண்ணிக்கை
தேவையான பொருட்கள் :
பச்சைப்பயறு 1கப்
பச்சரிசி 3மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 2
இஞ்சி 1/2'இன்ச்
சீரகம் 3/4தேக்கரண்டி
கொத்தமல்லி தழை 1கையளவு (தேவைப்பட்டால் )
பெருங்காயம் 2சிட்டிகை
தண்ணீர் 1/2-3/4கப்
உப்பு 1தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 1
நல்லெண்ணெய் 2மேஜைக்கரண்டி
இட்லி பொடி 2மேஜைக்கரண்டி
செய்முறை :
# பச்சைப்பயறு மற்றும் பச்சரிசியை 8மணி நேரம் (அ) இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
1.பயறை நன்கு கழுவிய பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து,பச்சை மிளகாய்,இஞ்சி,சீரகம் மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
2.சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து, உப்பு,பெருங்காயம் சேர்த்து கலக்க வேண்டும்.
3.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்க வேண்டும்.மாவுக்கலவை மிகவும் கெட்டியாகவோ நீர்த்தோ இல்லாமலிருக்க வேண்டும்.தோசைக்கல்லை மிதமான சூட்டில் சூடேற்றவும்.
4.ஒரு குழிக்கரண்டி மாவை வட்ட வடிவில் வார்க்கவும்.நல்லெண்ணெயை சிறிது ஓரத்தில் விட்டு ஒரு நிமிடம் வேகவிடவும்.
5.தோசையை திருப்பியிட்டு 30நொடிக்குப்பின் சூடாக பரிமாறவும்.
பச்சைப்பயறு தோசை ரெடி !!!
வெங்காய பச்சைப்பயறு தோசை :
1.தோசை வார்த்து,சுற்றிலும் நல்லெண்ணெய்யிட்டு அரிந்த வெங்காயத்தை அதன்மேல் பரப்பி விடவும்.
2.1/2தேக்கரண்டி இட்லி போடி தூவி,ஒரு நிமிடம் வேகவிட்டு திருப்பியிடவும்.அரை நிமிடம் கழித்து சூடாக பரிமாறவும்.
வெங்காய பச்சைப்பயறு தோசை ரெடி !!!
No comments:
Post a Comment